கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அனுமப்படலம்

 

 

 

கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அனுமப்படலம்

ருசியமுகம் மலை மீது அனுமன் இராமனைச் சந்தித்த வரலாற்றைக் கூறுவது அனுமப்படலம்

 

ருசியமுகம் என்னும் மலை மீது இராமலக்குவனரைக் கண்ட சுக்கிரீவன், அச்சம்

எய்தினார், சவரி, நெடிது, ஏய மால் வரை எளிதின்;

நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை சால் கவி அரசு,

செய்வது ஓர்கிலன்; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி,

'உய்தும் நாம்' என, விரைவின் ஓடினான், மலை முழையின். 1

 

                       சபரி என்பவள் விரிவாக வழிசொல்லி அனுப்பிய காடும் மலையும் கடந்து சென்ற இராமலக்குவர் பெரிய ருசியமுகம் என்னும் மலைமீது எளிதில் விரைவாக ஏறிச் சென்றனர்.அம்மலையில் இருந்த வலிமை மிக்க குரங்கினத்து அரசனாகி சுக்கிரீவன் வருகின்ற இவர்கள் நம் பகைவராவர் என்று அஞ்சி செய்வது ன்னதென்று அறியாதவனாய்நாம் இப்பொழுது தப்பிப் பிழைப்போம்' என்று கருதி அம்மலையின் குகை ஒன்றினுள் வேகமாய் ஓடினான்.

   

சாபத்தால் வாலி ருசியமுகம் என்னும் மலைக்கு வராது தனக்குப் பதிலாக வீரர்களை ஏவியிருக்கலாம் எனக் கருதுதல்

'காலின் மா மதலை! இவர் காண்மினோ; கறுவு உடை

வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரி சிலையர்;

நீல மால் வரை அனையர்; நீதியா நினைதி' என,

மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார், முழை அதனின். 2

 

                இராமலக்குவர் வரும் காரணத்தை உணராத  வானரர்கள் காற்றின் புதல்வனாகிய அனுமனேஇவர்கள் நம்மிடம் பகைமை கொண்ட வாலியின்
ஏவலால் நம்மை வருத்த வருகின்றவர்களாவர் கட்டமைந்த வில்லையுடையராய் உள்ளனர் நீலநிறமுடைய மலை போன்ற தோற்றத்தை உடையவர்கள் (இவர்களைக்) காண்பாய் முறையாக இவர்களை ஆராய்வாயாக என்று கூறி விட்டு  மனங்கலங்கி மலைக்குகைக்குள்ளே ஓடினார்கள்.

 

சிவபிரான் வானவர்களின் துன்பம் நீக்கியது போல அனுமான் அஞ்சற்க என ஆறுதல் கூறுதல்

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,

வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்

தவ்விட, தனி அருளு தாழ் சடைக் கடவுள் என,

'இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்' என்று இடை உதவி, 3

       அந்தக் குகையில்  சுக்கிரீவன், அமைச்சர் முதலியோர் மனம் கலங்கி பயந்து மனவுறுதி இழந்து நிற்கும் சமயத்தில், கொடிய ஆலகால நஞ்சைக்கண்டு கலங்கிய தேவர்களும் அசுரர்களும் அஞ்சுதல் நீங்கும்படி தனித்து வந்து அருள் செய்த தாழ்ந்த சடையினையுடைய சிவபிரான் போல (வானரர்களை நோக்கி) 'இந்த இடத்தில் இனிதாக இருங்கள் அஞ்ச வேண்டாம்' என்று அனுமான் இடை நின்று ஆறுதல் கூறினான்.

அனுமன் மாணவப் படிவமொடு இராமனை அணுகுதல்

அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,

'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என,

நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும்: 4

          அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான அனுமன் ஒரு மாணவ வடிவம் தாங்கி நீலமலையைப் போன்ற மைந்தனாம் இராமனை நெருங்கி அருகில் மறைவாக நின்று (அவர்களை நோக்கி) இவர்கள் கொடிய போர்த்தொழில் உடையர்; தவவேடம் தாங்கிய உடம்பினர்; கையில் வில்லேந்தியுள்ளனர் என்று மனத்தில் ஐயங்கொண்டு தனது கல்விஅறிவால் அவர்களைப் பற்றிச் சிந்தித்தான்.

மும்மூர்த்திகட்கும் இராமலக்குவர்க்கும் உள்ள வேற்றுமை 

'தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்,

மூவர்; மற்று, இவர் இருவர்; மூரி வில் கரர்; இவரை

யாவர் ஒப்பவர், உலகில்? யாது, இவர்க்கு அரிய பொருள்?

கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? 5

 

 

        தேவர்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவர்களாகிய முதன்மையான தேவர்களோ என்றால் அவர்கள் மூவராவர்; இவர்கள் இருவராய் இருக்கின்றனர்; அவர்கள் சூலம், திகிரி, வேதம் ஏந்தியிருக்க இவர்கள் வில்லைத் தாங்கிய சுரத்தினர்; இவர்களை ஒத்தவர்கள் உலகில் யாருளர்? இவர்களுக்குச் செய்தற்கு அரிய செயல்தான்
யாது உளது? எளிதாக இவர்கள் நிலைமையை எந்தத் தகுதியைக் கொண்டு தெளிவது?என  னுமன் மனதினுள் சிந்திக்கலானான்.

 

 

 

அனுமன் இராமலக்குவனர்களை மானிட வடிவம் என தெளிதல்

'சிந்தையில் சிறிது துயர் சேர்வுற, தெருமரலின்

நொந்து அயர்த்தவர் அனையர்; நோ உறச் சிறியர் அலர்;

அந்தரத்து அமரர் அலர்; மானிடப் படிவர்; மயர்

சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர்; 6

   இராமலக்குவனர்கள்   மனத்தில் சிறிது துன்பம் வந்து அடைய அத்துன்பத்தால் மனம் வருந்திச் சோர்ந்தவர்கள் போன்று காணப்படுகின்றனர். (அவ்வாறு) எளிதில் துன்பம் அடைவதற்கு எளியவர்கள் அல்லர்; தேவலோகத்து வாழும்
தேவர்கள் அல்லர்; மானிட வடிவமுடையார்; மயங்கத்தக்க மனத்திற்கு
ஏற்ற ஒரு சிறந்த பொருளைத் தேடுவதற்குப் பொருந்திய நிலைமையினை உடையராக விளங்குகின்றனர்.

 அனுமன் இராமலக்குவரின் முகக்குறிப்புகளால் நிலையை ஊகித்து அறிதல் (7-9)

'தருமமும், தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்;

கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று; அது கருதின்,

அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை,

இரு மருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். 7

        தருமமும் நல்லொழுக்கமுமாகவே இவர்கள் கொள்ளத்தக்கவர், தமக்குரிய செல்வமாக தருமத்தையும் தகவையும் எண்ணும் தன்மையுடையவர்கள். இவர்களது செயலும் வெறோரு பொருளைக் கருதியது அன்று. அது குறித்து ஆராய்ந்து பார்த்தால் பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற பொருளிற்கு இடையிலே அழிவு வந்திருக்கின்றது. அந்த அரிய பொருளையே இரண்டு பக்கங்களிலும் நெடிதாகப் பார்வையைச்செலுத்தித் தேடுகிறார்கள்.

 

அனுமன் இவர்களே தருமம் என்று துணிதல்

'கதம் எனும் பொருண்மை இலர்; கருணையின் கடல் அனையர்;

இதம் எனும் பொருள் அலது, ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்;

சதமன் அஞ்சுறு நிலையர்; தருமன் அஞ்சுறு சரிதர்;

மதனன் அஞ்சுறு வடிவர்; மறலி அஞ்சுறு விறலர்.' 8

 

                  கோபம் என்னும் பொருளின் தன்மையில்லாதவர்கள்; கருணையால் கடலை ஒத்தவர்கள்; நன்மை என்கின்ற பொருளை அல்லாமல் வெறோரு பொருளை (தீமையை)  அறிந்தவர்கள் அல்லர்; இந்திரனும்  அஞ்சத்தக்க தோற்றம் உள்ளவர்கள்; தரும தேவதையும் அஞ்சத்தக்க ஒழுக்கம் உடையவர்கள்; மன்மதனும் அஞ்சத்தக்க வடிவழகு பொருந்தியவர்கள்; யமனும் அஞ்சத்தக்க ஆற்றல் நிறைந்தவர்கள்.

 

 

என்பன பலவும் எண்ணி, இருவரை எய்த நோக்கி,

அன்பினன், உருகுகின்ற உள்ளத்தன், ஆர்வத்தோரை

முன் பிரிந்து, வினையர்தம்மை முன்னினான் என்ன நின்றான் -

தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான். 9

          தனது சிறந்த குணங்களால்  தனக்குத்தானே ஒப்பாவதன்றி வேறு ஒப்புமை இல்லாதவனாகிய அனுமன் மேற்கூறியவாறு பலவற்றையும் எண்ணி அவ்விருவரையும் உற்றுப்பார்த்து அன்பால் உருகுகின்ற உள்ளம் கொண்டவனாய் அன்புடையவர்களை முன்னர் ஒரு காலத்தில் விட்டுப்பிரிந்து அவர்களை மீண்டும் எதிர்ப்பட்டான் போல (அன்பு கொண்டு) நின்றான்.

 

 கொடிய விலங்குகளும் தம் கொடுமை நீங்கி, இராமலக்குவர் மாட்டு
அன்புகாட்டி உருகுதல்

'தன் கன்று கண்ட அன்ன தன்மைய, தறுகண் பேழ் வாய்

மின் கன்றும் எயிற்றுக் கோள் மா, வேங்கை, என்று இனையவேயும்,

பின் சென்று, காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற;

என் கன்றுகின்றது, எண்ணிப் பற்பல இவரை? அம்மா! 10

          கொடிய கண்ணையும் பெரிய வாயினையும் மின்னலும் ஒளிகுன்றி வருந்தும் படியான பற்களையும் உடைய சிங்கம், புலி என்ற இவை போன்ற கொடிய விலங்குகளும் (இராமலக்குவரைக் கண்டு) தத்தம் கன்றுகளைக் கண்டாற்போன்ற தன்மையனவாய் இவர்கள் பின்னால் சென்று காதல் மேலிட மருண்டு விழித்து உள்ளம் உருகுகின்றன. இங்ஙனம் இருக்க, இவர்களைப் பகைவர்களாகப் பலவாறு எண்ணி வருந்துவது ஏன்?

உயர்ந்தோர்க்குப் பறவைகள் இங்ஙனம், சிறை விரித்து நிழல் செய்யும் எனல்

'மயில் முதல் பறவை எல்லாம், மணி நிறத்து இவர்கள் மேனி

வெயில் உறற்கு இரங்கி, மீதா, விரி சிறைப் பந்தர் வீசி,

எயில் வகுத்து எய்துகின்ற; இன முகில் கணங்கள், எங்கும்

பயில்வுற, திவலை சிந்தி, பயப் பயத் தழுவும், பாங்கர். 11

          மயில் முதலான பறவைகள் எல்லாம் மணிபோன்ற நிறத்தினையுடைய இவர்கள் மேனியில் வெயில் படுவதற்கு மனம் வருந்தி இவர்கள் மீது விரிந்த சிறகுகளைப் பந்தலாகப் பரப்பிமதில் போலச் சுற்றிலும் வளைத்துக்கொண்டு தொடர்ந்து வருகின்றன. இனமாகிய மேகக் கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நெருக்கமாக நீர்த்துளிகளைச் சிந்திக்கொண்டு இவர்கள் பக்கத்தில் மெல்ல மெல்லத் தொடர்ந்து வருகின்றன.

 

 

இராமலக்குவரின் கடவுள் தன்மையைக் குறித்து அனுமன்
வியத்தல்

'காய் எரி கனலும் கற்கள், கள்ளுடை மலர்களேபோல்,

தூய செங் கமல பாதம் தோய்தொறும், குழைந்து தோன்றும்;

போயின திசைகள்தோறும், மரனொடு புல்லும் எல்லாம்

சாய்வுறும், தொழுவபோல்; இங்கு, இவர்களோ தருமம் ஆவார்? 12

       சுடும் நெருப்புப்போல வருத்துகின்ற பரற்கற்கள் தூய்மையான இராமலக்குவரின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகள் படும்போதெல்லாம்தேன் பொருந்திய புதிய மலர்களைப் போல
மென்மையாகக் குழைந்து விளங்குகின்றன. இராமலக்குவர் சென்ற இடங்களில் எல்லாம் மரங்களோடு புல் முதலிய யாவும் இராமலக்குவர்களை வணங்குவன போல சாய்ந்து நிற்கின்றன.இதனால் தருமதேவதைகள் என்றழைக்கப்படுபவர்கள் இவர்கள் தாமோ?

மீளாநெறியுய்க்கும் தேவரோ என்று அனுமன் உணர்ந்து வியத்தல் 'துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,

தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?

என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;

அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13

 

         பிறவித் துன்பங்களைப் போக்கி அத்துன்பங்களுக்குக் காரணமான மயக்கத்தால் உண்டாகின்ற பழவினை தன்னைப் போக்கி தெற்குத் திசையிலுள்ள யமலோகத்தில் அல்லாமல் (சென்றவர்கள்) மீண்டு வருதலில்லா முத்திநெறியில் செலுத்துகின்ற கடவுளரோ இவர்கள்? இவர்களைக் காணும் பொழுது என் எலும்பும் உருகுகின்றது.
அளவு இல்லாத காதல் மேன்மேலும் மிகுகின்றது;இவர்களிடம் எனக்குத் தோன்றும் அன்பிற்கு எல்லை இல்லை; அவ்வாறு ஆவதற்குக் காரணம் யாதோ? அறிய இயலாதவனாக இருக்கின்றேன் என்று அனுமன் உணர்ந்து வியக்கின்றான்.

அனுமன் இராமலக்குவரை நேரில் சந்தித்தல்
இவ் வகை எண்ணி, ஆண்டு, அவ் இருவரும் எய்தலோடும்,

செவ் வழி உள்ளத்தானும், தெரிவுற எதிர்சென்று எய்தி,

'கவ்வை இன்றாக, நுங்கள் வரவு!' என, கருணையோனும்,

'எவ் வழி நீங்கியோய்! நீ யார்?' என, விளம்பலுற்றான்: 14

              இவ்வாறு ஆலோசித்து செம்மை பொருந்திய மனமுடையவனாகிய அனுமனும் அவ்விடத்தில் இராமலக்குவரும் வந்த அளவில் அவர்களுக்குத் தெரியுமாறு எதிரில்சென்று அடைந்து ''உங்கள் வருகை துன்பம் இல்லாதது ஆகுக'' என வரவேற்கின்றான்.அருள் உடையவனாகிய இராமனும் நீஎவ்விடத்திலிருந்து வருகின்றாய்? நீ யார் என்று வினவ அனுமன் சொல்லத் தொடங்கினான்.

இராமனின் அழகில் அனுமன் ஈடுபாடு கொள்ளல்

'மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்

நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்

கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்; 15

          மேகம் போல நீலநிறமுடையதாய்த் திரண்டு அமைந்த அழகிய மேனியை உடையவனே! பெண்கள் யாவர்க்கும் நஞ்சு என்று சொல்லத்தக்க தன்மையை உடையனவாகி, குளிர்ச்சி மிக்க பனிக்கு வாடாத தாமரை மலர்களுக்கு ஒப்பாக மலர்ந்து விளங்குகின்ற சிவந்த கண்களை உடையவனே! யான் வாயுதேவனுக்கு அஞ்சனாதேவியின் வயிற்றில் பிறந்தேன்;  என் நாமமும் அனுமன் ஆகும்.

 

'இம் மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்

செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி

விம்மல் உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன்' என்றான்-

எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான். 16

           எந்த மலைக்கூட்டமும் தாழ்வுறும்படி  புகழைச் சுமந்து கொண்டு உயர்ந்த தோள்களை உடையவனாகிய அனுமன் ''இந்த ருசிய முகம் என்னும் மலையில் தங்கியிருந்து வாழ்ந்து வரும் எரிகின்ற ஒளிக்கதிர்களை உடைய சூரியதேவனின் மகனாகிய தலைவனாகிய சுக்கிரீவனுக்கு ஏவிய பணிகளைச் செய்பவனாவேன். நும்முடைய வருகையைப் பார்த்து சுக்கிரீவன்  உங்களை யாரென்று அறிந்து வருமாறு ஏவியதால் விசாரித்து அறிந்து செல்ல வந்தேன்''என்றான்.

எல்லா மேன்மைப் பண்புகளும் அனுமனிடம் அமைந்திருத்தலை இராமன் தெளிவாக அறிதல்

மாற்றம் ·து உரைத்தலோடும், வரி சிலைக் குரிசில் மைந்தன்

தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,

'ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும்

வேற்றுமை இவனோடு இல்லையாம்' என, விளம்பலுற்றான்: 17

                 அந்த மறுமொழியை அனுமன் சொன்ன அளவில் கட்டமைந்த வில்லை உடைய வலியோனாகிய இராமன் தெளிவடைந்து இவ்வனுமனைக் காட்டிலும் செம்மைக் குணம் உடையோர் பிறர் இன்மையைத் தெளிந்து திறமையும் நிறைந்த குணங்களும் கல்வியால் வரும் அடக்கமும் அறிவும் என்று சொல்லக் கூடியன அனைத்தும் இவனோடு பொருந்தி இருக்கின்றது என்று நினைத்து இலக்குவனுக்கு அனுமனை வியந்து இராமன் சொல்லத் தொடங்கினான்.

 

அனுமன் எல்லாக்கலைகளையும் எல்லா வேதங்களையும் நன்கு
கற்றவன் என்று இராமன் புகழ்தல்

"இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும், வேதக் கடலுமே" என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே? யார் கொல் இச் சொல்லின் செல்வன்?-

வில் ஆர் தோள் இளைய வீர! - விரிஞ்சனோ? விடைவலானோ? 18

             வில் அமைந்த தோளை உடைய இளைய வீரனே! இங்கு இவன் புகழ்
மிகும்படி கற்றுக்கொள்ளாத கலைகளும் வேதமாகிய கடலும் உலகத்தில்
எங்கும் இல்லாதனவே என்று சொல்லுமாறு (இவன் பெற்றிருக்கும்) அறிவுத்தெளிவு, இவன் பேசிய சொல்லாலேயே வெளிப்பட்டதன்றோ? இத்தகைய சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ?  விடை ஏறி நடத்தவல்ல சிவனோ? யாராக இருத்தல் கூடும்.

 

ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் கொண்ட சொல்லின் செல்வன் அனுமன் என இராமபிரான் இலக்குவனுக்குக் கூறுதல்

'மாணி ஆம் படிவம் அன்று, மற்று இவன் வடிவம்; மைந்த!

ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற

சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்; பின்னர்க்

காணுதி மெய்ம்மை' என்று, தம்பிக்குக் கழறி, கண்ணன், 19

               வலிமையை உடைய இலக்குவ! இவனது வடிவம் இப்போது காணப்பெறும் சாதாரண பிரமச்சாரி வடிவம் அன்று; பின் யாதெனில் இந்த உலகங்களுக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லக்கூடிய இவன் திறமைக்கு ஏற்றதாகிய மிகவும் மேம்பட்ட சிறப்புக்களை நான் ஐயமின்றித் தெரிந்து கொண்டேன். அஃது உண்மையாதலை நீயும் பின்பு காண்பாய் என்று தம்பியாகிய இலக்குவனுக்கு இராமபிரான் இடித்துக் கூறினான்.

குரங்குக் கூட்டத்தின் அரசனாகிய சுக்கிரீவனைக் காண வேண்டிய விருப்பத்தை இராமன் கூறல்

'எவ் வழி இருந்தான், சொன்ன கவிக் குலத்து அரசன்? யாங்கள்,

அவ் வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்;

இவ் வழி நின்னை உற்ற எமக்கு, நீ இன்று சொன்ன

செவ் வழி உள்ளத்தானைக் காட்டுதி, தெரிய' என்றான். 20

         அனுமனை நோக்கி ''நீ சொன்ன குரங்குக் கூட்டத்தின் அரசனாகிய சுக்கிரீவன் எவ்விடத்தில் உள்ளான் நாங்கள் அவ்விடத்திற்குச் சென்று அவனைக் காணும் விருப்பத்தோடு, அவனைச்சார வந்தோம். இந்த இடத்தில் உன்னை எதிர்ப்பட்ட எங்களுக்கு நீ இப்போது கூறிய செந்நெறியில் செல்லும் உள்ளம் உடைய சுக்கிரீவனை நாங்கள் தெரிந்து கொள்ளுமாறு காட்டுவாயாக''என்று   இராமபிரான்  அனுமனிடம் கூறினான்.

 சுக்கிரீவனின் தவப்பயனாக அனுமன் கருதுதல்

'மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில், மற்றுப்

பூதரப் புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே?

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின், அன்னான்,

தீது அவித்து அமையச் செய்த, செய் தவச் செல்வம் நன்றே! 21

                 திசைகளின் எல்லைகளில் உள்ள சக்கரவாளகிரி என்னும் மலையோடு உயர்ந்து எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் உலகத்தில் பூமியைத் தாங்கும் மலை போன்ற உலகத்தைத் தாங்கும் தோள்களையுடைய வீரர்களாகிய உங்களை ஒத்து விளங்கும் தூயவர் வேறு யாருளர்? (எவருமிலர்) அச்சுக்கிரீவனிடத்து அன்புகாட்டி அவனைக் காண்பதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள் என்றால் அச்சுக்கிரீவன் தீமைகளைச் செய்யும் ஐம்பொறிகளை அடக்கி, பொருத்தமுறச் செய்த செய்தவமாகிய செல்வம் சிறப்புடையதாகும்.

இராமலக்குவர் வந்ததால் இனிச் சுக்கிரீவன் இழந்த செல்வத்தைப் பெறுவன் எனவும் வாலியை வெல்வது திண்ணம் எனவும் அனுமன் கருதுதல்

'இரவிதன் புதல்வன் தன்னை, இந்திரன் புதல்வன் என்னும்

பரிவுஇலன் சீற, போந்து, பருவரற்கு ஒருவன் ஆகி,

அருவிஅம் குன்றில், என்னோடு இருந்தனன்; அவன்பால் செல்வம்

வருவது ஓர் அமைவின் வந்தீர்; வரையினும் வளர்ந்த தோளீர்! 22

             மலையினும் பெரிதாக வளர்ந்த தோள்களை உடையவர்களே சூரியன்
மகனாகிய சுக்கிரீவனை இந்திரன் மகன் என்று கூறப்படும் இரக்கமற்றவனாகிய வாலி என்பவன் சினந்து துரத்தியதால் அஞ்சி வந்து  துன்பத்தை அனுபவிக்கத் தான் ஒருவனே ஆகி அருவிகள் பாய்கின்ற அழகிய ருசியமுகம் என்னும் இம் மலையில் என்னோடு தங்கியிருக்கிறான்.  அவனிடத்து செல்வம் வருதற்குரிய ஒரு தன்மையினால் நீங்கள் இங்கு வந்தீர்கள் என   அனுமன் பகர்கின்றான்.

இராமபிரானிடத்து அனுமனின் வேண்டுகோள்

'ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி

தொடங்கினர், மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே;

கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை

நடுங்கினர்க்கு, அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ? 23

               கருங்குதல் இல்லாது விரிந்துள்ள உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் விரும்பியனவற்றைத் தானம் செய்து தொடங்கின யாகங்களையும் நிறைவேற்ற  சான்றோர்கள் தொன்று தொட்டு வரும் அறங்களைச் செய்யத் துணிவார்கள் அல்லவா? தன் குலத்திற்கே கொடிய பகைவனாகி கொல்வதற்காக வந்த யமன் போன்ற பகைவனை எண்ணி அஞ்சியவர்களுக்கு 'அஞ்சாதே' என அபயம் கொடுக்கும் அறத்தைக் காட்டிலும் மேம்பட்டதோர் அறம் உண்டோ? (இல்லை).

இராமலக்குவரின் சிறப்பையும் ஆற்றலையும் புகழ்ந்து தமக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்குமாறு அனுமன் வேண்டுதல்

'"எம்மையே காத்திர்" என்றற்கு எளிது அரோ? இமைப்பு இலாதோர் -

தம்மையே முதல் இட்டு, ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல்

மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்; முருகற் செவ்வி

உம்மையே புகல் புக்கேமுக்கு, இதின் வரும் உறுதி உண்டோ? 24

 

         கண்கள் இமைத்தல் இல்லாத தேவர்களை முதலாகக் கொண்டு உயர்ந்த
அசையும் பொருள்களையும் அசையாப்பொருள்களையும் படைத்த ஆற்றலை உடைய மூன்று வகைப்பட்ட ஏழு உலகங்களையும் பாதுகாக்கும் தலைவர் நீங்கள். (ஆதலால்) எளியராகிய எங்களை மாத்திரமே காப்பாற்றுவீர் என்று கூறுதல் உங்களுக்கு எளிமைத் தன்மையைக் கற்பிப்பது ஆகும். முருகனைப்போன்ற சிறப்பினை உடைய உங்களையே புகலிடமாகக் கொண்டு அடைக்கலம் அடைந்த எங்களுக்கு இதைக் காட்டிலும் வந்தடையக் கூடிய நன்மை வேறு
உளதோ? இல்லை என்று கூறி அனுமன் இராமலக்குவரிடம் அடைக்கலம் புகுகின்றான்.

மெய்ம்மையின் வேலி போல்வானான அனுமனுக்கு இலக்குவன் தங்கள் நிலைமையை விவரித்தல்

'யார் என விளம்புகேன் நான், எம் குலத் தலைவற்கு, உம்மை?

வீர! நீர் பணித்திர்!' என்றான், மெய்ம்மையின் வேலி போல்வான்;

வார் கழல் இளைய வீரன், மரபுளி, வாய்மை யாதும்

சோர்வு இலன், நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்: 25

                 மெய்ம்மையைப் பாதுகாக்க அமைந்த வேலி போல்பவனாகிய அனுமன், இராமலக்குவரைப் பார்த்து, 'வீரர்களே! எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு உங்களை நான் யாவர் என்று சொல்வேன்? நீங்கள் சொல்லுங்கள்'. நீண்ட வீரக்கழல் அணிந்த இளையவீரனாகிய இலக்குவன் முறைப்படி உண்மை நிகழ்ச்சிகள் யாவற்றையும் சோர்வு இல்லாதவனாய் தங்களுக்கு நேர்ந்த நிலைமைகளையெல்லாம் நன்றாய் விளங்குமாறு சொல்லத்தொடங்கினான்.

தேவர் வேண்ட, சம்பரன் முதலிய அசுரர்களை வென்று மீட்ட விண்ணுலகத்தைத் தயரதன் இந்திரனுக்குக் கொடுத்த சிறப்பினைக் கூறுதல் (26 – 28)

'சூரியன் மரபில் தோன்றி, சுடர் நெடு நேமி ஆண்ட

ஆரியன்; அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட

வீரியன்; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட,

கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன்; 26

                                அந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன் சூரிய குலத்தில் தோன்றி ஒளி மிகுந்த பெரிய ஆணைச் சக்கரத்தை உடையவனாய் உலக முழுவதும் ஆட்சி செலுத்திய உயர்ந்தோன்; தேவர்கள் பொருட்டு சம்பரன் முதலிய அசுரர்களை வென்று உயிரைப் பறித்த வீரம் உடையவன்; பல வேள்விகளைச் செய்து மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆட்சி புரிந்த செயல்திறம் படைத்தவன்; அருளே வடிவு

எடுத்தாற் போன்ற கண்ணோட்டம் உடையவன்;

 

'புயல் தரு மதத் திண் கோட்டுப் புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,

மயல் தரும் அவுணர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட,

இயல் தரும் புலமைச் செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வாத்

தயரதன்; கனக மாடத் தட மதில் அயோத்தி வேந்தன்; 27

          மேகம் போலப் பொழியும் மதத்தையும் வலிமையான தந்தங்களையும் முகத்தில் புள்ளிகளையும் உடைய மலைகள் போன்ற யானைகளுக்குத் தலைவனாகிய பட்டத்து அரச யானையை ஏறிச் செலுத்தி மதிமயக்கம் கொண்ட அசுரர்கள் எல்லாம் அழியும்படி, கட்டமைந்த வில்லைக் கொண்டு போர் செய்தவன்; இயல்பாகப் பொருந்திய அறிவினையும் செங்கோலையும் உடைய மனு முதலான எந்த அரசர்களும் நிகர் ஆகமாட்டாத தயரதன் என்பான் பொன் மயமான மாளிகைகளையும் பெரிய மதிலையும் உடைய நகரத்திற்கு வேந்தனாவான்.

 

'அன்னவன் சிறுவனால், இவ் ஆண்தகை; அன்னை ஏவ,

தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி,

நல் நெடுங் கானம் சேர்ந்தான்; நாமமும் இராமன் என்பான்;

இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே.' 28

         இந்த வீரர்களிற் சிறந்தவன் அந்தத் தயரத சக்கரவர்த்தியின் மகனாவான்; தன் சிற்றின்னையின் கட்டளையால் மூத்தமகனாகிய தனக்கு உரிமையுடைய ஆட்சிச் செல்வத்தை தன் தம்பியாகிய பரதனுக்குப் பெருந்தன்மையோடு கொடுத்துவிட்டு, நெடிய காட்டை அடைந்தான். பெயரும் இராமன் எனப்படுபவன்; நீண்ட வில்லாற்றால் பொருந்தியவனுக்கு  குற்றேவல் செய்கின்ற அடியவன் யான் என்று  தன் தமையனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் இலக்குவன்
உணர்த்தினான்.

 இராமன் வணங்கத்தக்க குணங்களை உடையவன் என அனுமன் அறிந்து வணங்குதல்

என்று, அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப்

புன் தொழில் இறுதி ஆக, புகுந்து உள பொருள்கள் எல்லாம்,

ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல், உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு,

நின்ற அக் காலின் மைந்தன், நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான். 29

             என்று இலக்குவன் இராமபிரானின் பிறப்பு முதல் இராவணன் செய்த வஞ்சனையாகிய கீழ்த்தரமான செயல் ஈறாக நடந்துள்ள செய்திகளையெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியும் விடுபட்டுப் போகாமல் எடுத்துரைத்தான். அவ்வாறு சொல்ல கேட்டுக் கொண்டு நின்ற காற்றின் மைந்தனாகிய அந்த அனுமன் பெரிதும் மகிழ்ந்து இராமபிரான் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

இராமன் அந்தண வேடத்தில் இருந்த அனுமனிடம் அரசனாகிய தன்னை வணங்குதல் தகாது என்றவுடன் அனுமன் தன்னையும் குரங்குக் குலத்தில் ஒருவன் என்று கூறல்                                                                                                        

தாழ்தலும், 'தகாத செய்தது என்னை, நீ? தருமம் அன்றால்;

கேள்வி நூல் மறை வலாள!' என்றனன்; என்னக் கேட்ட

பாழிஅம் தடந் தோள் வென்றி மாருதி, 'பதுமச் செங் கண்

ஆழியாய்! அடியனேனும் அரிக் குலத்து ஒருவன்' என்றான். 30

       அனுமன் தன்னை வணங்கிய அளவில் இராமன் அனுமனை நோக்கி, கேட்டறிந்த சாத்திரங்களிலும் வேதங்களிலும் வல்ல அந்தணனே செய்யத்தகாத காரியத்தைச் செய்தது ஏன் அந்தணன் அரசனை வணங்குதல் தருமம் அன்று என்று கூறினான்.
அவ்வாறு கூறியதைக் கேட்ட வலிமையான அழகிய பெரிய தோள்களை உடைய வெற்றிமிக்க அனுமன் 'செந்தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையும் ஆணைச் சக்கரமும் உடையவனே அடியனாகிய யானும் குரங்குக் குலத்தில் தோன்றிய ஒருவனே யாவேன் என்று கூறினான்.

அனுமன் பேருருக்கொண்டு நிற்றல்

மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நல் நூல்

பின் உருக் கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ,

பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்

தன் உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான். 31

         

             துணையின்றி வருந்தும் தருமத்தின் தனிமையைப் போக்க வந்தவனாகிய அனுமன், மின்னலின் வடிவத்தைத் தன்பால் கொண்டாற் போன்ற ஒளிபொருந்திய வில்லேந்திய இராமலக்குவர் வியப்படையுமாறு வேதம் முதலான சாத்திரங்களே   பின்னர் ஒரு வடிவம் எடுத்து வந்தது என்று சிறப்பித்துச் சொல்லும் பாராட்டுரையும் சிறுமையுறும்படி பொன்மயமான வடிவங் கொண்ட மேருமலையும் தன் தோள்களுக்கு உவமையில் ஒப்பாகாத தன்னுடைய பேருருவத்தைக் கொண்டு நின்றான்.

 

கண்டிலன், உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட

புண்டரீகக் கண் ஆழிப் புரவலன், பொலன் கொள் சோதிக்

குண்டல வதனம் என்றால், கூறலாம் தகைமைத்து ஒன்றோ,

பண்டை நூல் கதிரோன் சொல்ல, படித்தவன் படிவம்? அம்மா! 32

             மண்,விண்,பாதாளம் என்ற உலகம் மூன்றையும் திரிவிக்கிரம அவதாரத்தில் அடியால் அளந்து தனதாக்கிக் கொண்ட தாமரை மலர் போன்ற கண்கனையும் சக்கரப்படையையும் உடைய காத்தற் கடவுளாகிய திருமாலின் அம்சமான இராமனும், பொன்னாலான ஒளிமிகுந்த குண்டலம் அணிந்த அனுமனின் முகத்தைக் காண இயலாதவாறு, பழமையான இலக்கண முதலிய கலைகளைச் சூரியனுக்கு மாணவனாய் கற்றவனாகி, பெருவடிவமுடையவனாய் நிற்கும் அனுமனின் வடிவம் நம் போன்றோரால் சொல்வத்தக்க தன்மையுடையதொரு பொருளோ?அன்று என வியந்து கூறுமாறு நின்றான் அனுமன்.

 இராமன் இலக்குவனிடம் அனுமனைக் குறித்து வியந்து பேசுதல் (33-34)

தாள் படாக் கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, 'அம்மா!

கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும்

நாட் படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும்,

கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது' என்றான். 33

             இராமன் தன் தம்பியாகிய இலக்குவனுக்கு ஞானஒளி கெடாதது ஆகி,காலவரையறைக்கு உட்படாத வேதங்களாலும் ஐயம் திரிபு அறியாமை என்ற குற்றங்கள் பொருந்தாத உயிர்களின் ஞானத்தினாலும் அறிந்து கொள்ளப்படாத பரம்பொருளே குரங்கின் உருவத்தைக்கொண்டது என்று புகழ்ந்து கூறுகிறான்.

'நல்லன நிமித்தம் பெற்றேம்; நம்பியைப் பெற்றேம்; நம்பால்

இல்லையே, துன்பம் ஆனது; இன்பமும் எய்திற்று; இன்னும்,

வில்லினாய்! இவனைப் போலாம் கவிக் குலக் குரிசில் வீரன்

சொல்லினால் ஏவல் செய்வான்; அவன் நிலை சொல்லற்பாற்றோ?' 34

           நல்லனவாகிய நிமித்தங்களைப்பெற்றோம்.ஆதலால் அனுமனாகிய நம்பியைப் பெற்றோம்; நம்பால் துன்பம் ஆனது இல்லையே; இன்பமும் எய்திற்று;மேலும் வில்லையுடையவனே!இவனைப் போன்ற கவிக்குலத்தில் பிறந்த உபகாரிய வீரன்,சொல்லின்படி ஏவற் பணி செய்வான் என்றால் அச்சுக்கிரீவன் நிலை சொல்லுந் தரத்ததோ?மேம்பட்டதே ஆகும் எனப் புலப்படுத்துகின்றான் இராமன்.

 

அனுமன் சுக்கிரீவனை நட்புக்கொள்ள இன்னே கொணர்கின்றேன் எனல்

என்று, அகம் உவந்து, கோல முகம் மலர்ந்து, இனிதின் நின்ற

குன்று உறழ் தோளினாரை நோக்கி, அக் குரக்குச் சீயம்,

'சென்று, அவன் தன்னை, இன்னே கொணர்கின்றேன், சிறிது போழ்தில்;

வென்றியிர்! இருந்தீர்' என்று, விடைபெற்று, விரைவில் போனான். 35

            என்று சொல்லி மனமகிழ்ந்து, அதனால் அழகிய முகமும் மலரப்பெற்று வியப்பினால் இமையாது நின்ற மலை போன்ற தோள்களையுடைய இராம இலக்குவரைநோக்கிஅனுமனாகியசிங்கம்,”வெற்றியையுடையவர்களே! சிறிதுபோழ்து இங்கு இருங்கள்; யான் சென்று அச்சுக்கிரீவனை இப்பொழுதே அழைத்துக் கொண்டு வருகின்றேன்” என்று கூறி, அவர்பால் விடைப்பெற்றுச்செல்கின்றான் அனுமன்.

 

 

 

 

துணைமை நின்றவை:

ü  http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=34

ü  https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

Comments

Popular posts from this blog

இலக்கணம் - நன்னூல் - எழுத்ததிகாரம் - வினா வங்கி -23UTAC32